உங்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிகள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

நமது உடலில் பீன்ஸ் விதை-வடிவில் காணப்படும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரக கற்கள் மற்றும் பிற நோய்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தேவையற்ற துகள்களை அவற்றிலிருந்து கரைப்பதும், வெளியேற்றுவதும் அவசியமாகும். சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறையைப் பின்பற்றி நச்சுகளை நீக்கி, சுத்தம் செய்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பேணலாம்.

சிறுநீரக சுத்திகரிப்பு என்றால் என்ன?

மூலிகை சாறுகள், ஸ்மூதீஸ், தேநீர் போன்ற சிறுநீரகத்திற்கு ஏதுவான பானங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வதை வலியுறுத்தும் சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறையானது, அவற்றிலிருந்து நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறைகள் உண்மையாகவே பலன் தருமா?

இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பது, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, மற்றும் எடை குறைப்பிற்கு உதவுவது போன்ற பல ஆரோக்கிய நற்பலன்களை சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறைகள் வழங்குகின்றன.

இருப்பினும், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறுநீரக சுத்திகரிப்பு உணவுகளின் விளைவை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறை என்பது கிட்டத்தட்ட பல வகையான டிடாக்ஸ் (நச்சு நீக்கும்) திட்டங்களைப் போன்றதாகும். சத்தான உணவை உட்கொள்வதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமான சுத்திகரிப்பு பண்புகள் சில வகை உணவுகள், தேநீர் மற்றும் மூலிகைகளில் உள்ளன.

சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் வழிகள்

அதிக தண்ணீர் குடிக்கவும்

சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற அதிகளவில் தண்ணீர் அருந்துவது முக்கியமாகும். தண்ணீர் இரத்த நாளங்களை நன்கு திறந்துவிட்டு, சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தை எளிதாக்கி முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

தினமும் ஆண்களுக்கு 3.7 லிட்டர் தண்ணீரும், பெண்களுக்கு 2.7 லிட்டர் தண்ணீரும் திரவமாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

சோடியம் உட்கொள்வதைக் குறைக்கவும்

அதிகமாக உப்பு உட்கொள்வதால் சிறுநீரில் புரத அளவு அதிகரிக்கிறது, அதுவே சிறுநீரக நோய்கள் மற்றும் இருதய நோய்கள் உருவாக முக்கிய ஆபத்து காரணியாகவும் உள்ளது.

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழந்த நபர்கள் ஒரு நாளைக்கு 2300 mg (மில்லிகிராம்) அளவிற்கு மேல் சோடியம் உட்கொள்ளக்கூடாது.

உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவும்

உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் சிறுநீரகங்கள் மற்றும் உடலின் பொதுவான ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, மற்றும் பின்வரும் சிறுநீரகத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்வதன் மூலம் தேவையற்ற கழிவுகளை உடலிலிருந்து நீக்கலாம்.

  • முட்டைகோஸ்
  • குடை மிளகாய்
  • காளிஃபிளவர்
  • பச்சை இலைக் காய்கறிகள்
  • ப்ரக்கோலி
  • மெலன்கள்
  • பெர்ரி
  • பூண்டு
  • ஆப்பிள்
  • ஆலிவ் எண்ணெய்
  • மஞ்சள்

உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் 6 சிறந்த உணவுகள்

திராட்சை

திராட்சையில் வைட்டமின் C மற்றும் K தாராளமாக உள்ளன; இவற்றின் குறைபாடு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற மினரல்களும், அதிக நார்ச்சத்தும் நிறைந்த உணவுகள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளதன் காரணமாக, இவை சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ஏதுவான தேர்வாக இருக்கும். கூடுதலாக, அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் B6, ஃபோலேட் மற்றும் வைட்டமின் C ஆகியவையும் நிறைந்துள்ளன. ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் C – உடலின் ஆற்றலை உருவாக்குவது, இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. B6 மற்றும் ஃபோலேட் ஆகிய இரண்டும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகின்றன. சிவப்பு மிளகாயில் உள்ள லைகோபீன் என்கிற சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, சிறுநீரகம் செயலிழப்பதையும் தாமதப்படுத்துகிறது.

இஞ்சி

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இஞ்சி செரிமானத்திற்கு உதவும் மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரிழப்பு, குடிப்பழக்கம் மற்றும் நீரிழிவு நோயால் உண்டாகும் தீங்குகளிலிருந்து இஞ்சி சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க தைம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தலாம். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை தைமிற்கு உள்ளது. உயர் இரத்த அழுத்தமானது உறுப்புகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது; எனவே தைம்  சிறுநீரகங்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது.

மஞ்சள்

இஞ்சியுடன் தொடர்புடைய மஞ்சளில் அதிக பொட்டாசியம் உள்ளதால், இது சிறுநீரகங்களுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனினும், சிறுநீரக நோய் உள்ள நபர்களுக்கு மஞ்சள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

இலைக் காய்கறிகள்

இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன; அவற்றிலுள்ள வைட்டமின்கள் A, C மற்றும் K; கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் – சிறுநீரக செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன.

பழச்சாறுகள்

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் பழச்சாறுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். குறைந்த பொட்டாசியம் அல்லது அதிக கால்சியம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து பழச்சாறுகளை தயாரிப்பது நல்ல பலன்களைத் தரும்.

கால்சியம் நிறைந்த உணவுகள்

கால்சியம் குறைவாக உள்ள உணவுகள் சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. பால், தயிர் மற்றும் ஆக்ஸலேட் உள்ள சீஸ் வகைகள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை  சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுநீரகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு வயிறு மற்றும் குடல் பகுதியில் ‘கால்சியம் மற்றும் ஆக்ஸலேட்’ ஆகியவை ஒன்றாக பிணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதனால் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது.

2 நாள் சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறை : ஒரு எடுத்துக்காட்டு

நாள் 1

சாப்பாடுபட்டியல்
அதிகாலைகோதுமைப் புல் (வீட் கிராஸ்)பவுடர் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் – 1 டம்ளர்
காலை உணவுசிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் மூன்று பழங்கள் (1/2 கப்) + தேங்காய் பால் (100 மில்லி) மற்றும் ஸ்பைருலினா போன்ற பச்சை தூள் ஆகியவையை சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூதி.
மதிய உணவுகிரீன் ஸ்மூதி அல்லது காய்கறி ஸ்மூதி
இரவு உணவுசாலட் + சிக்கன். விரும்பும் பட்சத்தில் துளசி சாறினை எடுத்துக்கொள்ளலாம்.

நாள் 2

சாப்பாடுபட்டியல்
அதிகாலைவெதுவெதுப்பான எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் – 1 டம்ளர்
காலை உணவு1/2 கப் ஆப்பிள் + 2 வெள்ளரிக்காய் + 1 கொத்து கேல் கீரை + 1/2 எலுமிச்சை + ஒரு கொத்து புதினா இலைகள் மற்றும் 1/4 அங்குல இஞ்சித் துண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டிடாக்ஸ் பானம்.
மதிய உணவுப்ளூபெர்ரி மற்றும் செர்ரி போன்ற பழங்கள் சேர்த்த ஸ்மூதி – ஆளி விதைகள் மற்றும் பாதாம் பால் சேர்த்தது.
இரவு உணவுவெங்காயம், மிளகு, முட்டைக்கோஸ், பார்ஸ்லி, பூண்டு மற்றும் செலரி ஆகியவை சேர்த்த காய்கறி சூப்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் சப்ளிமென்ட் உணவுகள் 

வைட்டமின் B6

PubMed வெளியிட்டுள்ள கட்டுரையில் – நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் CAPD நோயாளிகள் – வைட்டமின் B6 சப்ளிமென்ட்டை 6 mg அளவில் நீண்டகால அடிப்படையில் தினசரி உட்கொள்வதன் மூலம் வைட்டமின் B6 குறைபாட்டைத் தடுக்கலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை சப்ளிமென்ட்களாக எடுத்துக்கொள்வதன் மூலமாக ‘இறுதி கட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதன் ஆபத்தை கணிசமாக குறைக்கவும், நோய் மேற்கொண்டு அதிகரிப்பதை தள்ளிப்போடவும் முடியும் என்று NCBI-யின் கட்டுரை கூறுகிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சிறுநீரக இன்ஃப்ளமேஷனை குறைக்கவும், சிறுநீரக நோய் அடுத்த நிலைக்கு செல்வதை தடுக்கவும் உதவுகின்றன.

பொட்டாசியம் சிட்ரேட்

பொட்டாசியம் சிட்ரேட் சிறுநீரை அதிக காரத்தன்மை (அல்கலைன்) கொண்டதாகவோ அல்லது குறைந்த அமிலத்தன்மை கொண்டதாகவோ ஆக்குகிறது; அதன் காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சிறுநீரக பிரச்சினைகள் உள்ள ஒரு சிலருக்கு ஏற்படும் பாதிப்பான – மெட்டபாலிக் அசிடோசிஸ் என்கிற வளர்சிதை மாற்றத்தின் போது அமிலமாகும் நிலைக்கும் பொட்டாசியம் சிட்ரேட் சிகிச்சையளிக்கிறது.

சிறுநீரக சுத்திகரிப்பிற்கு உதவும் சக்திவாய்ந்த பானங்கள்

ஆப்பிள் சிடர் வினிகர்

நமது உடலில் உள்ள, குறிப்பாக சிறுநீரகங்களில் உள்ள தேவையற்ற நச்சுத்தன்மைகளை நீக்குவதன் மூலம், ஆப்பிள் சிடர் வினிகர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள – அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் அமிலம் ஆகியன, சிறுநீரக கற்களை உடைக்கவும், அவை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றன.

எலுமிச்சை சாறு

இயற்கையான அமிலப் பொருளான எலுமிச்சை சாறு, சிறுநீரில் சிட்ரேட் அளவை உயர்த்துவது தெரியவந்துள்ளது; இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது குறைகிறது. துரிதமாக ஒரு டிடாக்ஸ் பானத்தினை தயாரிக்க தினமும் ஒரு டம்ளர் புதிதாக பிழிந்த எலுமிச்சை ஜூஸை குடிக்கலாம்.

டேன்டேலியன் தேநீர்

டேன்டேலியன் இலைகளில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் ஒரு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் ஆகும் – அவை சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவது, இரத்தத்தை சுத்திகரிப்பது, மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிப்பது ஆகியவற்றிற்கு உதவுகின்றன. டேன்டேலியன் தேநீரை குடிப்பதை வழக்கமாக்கினால், சிறுநீரக நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உதவுவதோடு, சிறுநீரக நோயைத் தடுக்கவும் உதவுகிறது.

பச்சை ஸ்மூதிகள்

பச்சை ஸ்மூதிகளில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், உடலிலிருந்து நச்சுகளை வடிகட்ட கடினமாக பணிபுரியும் சிறுநீரகங்களுக்கு ஊட்டமளிக்கின்றன.

துளசி சாறு

துளசி இலைகள் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதோடு, சிறுநீரக கற்களுக்கு மூல காரணமான யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கின்றன. துளசியில் உள்ள அசிட்டிக் அமிலம் போன்ற சேர்மங்கள், சிறுநீரின் வழியாக சிறுநீரக கற்களை அகற்ற உதவுகின்றன.

முடிவுரை

சிறுநீரகத்திலிருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு, மாயாஜால சுத்திகரிப்பு முறை என்று எதுவும் இல்லை. ஆனால் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு காரணங்களுக்காக இந்த சுத்திகரிப்பு பானங்கள் முக்கியமானவையாகும்.

தாராளமாக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, சமச்சீர் உணவு முறை, மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு சிறந்த வழிகளாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சிறுநீரக சுத்திகரிப்பு முறைகளைப் பின்பற்றுவது நல்லதா?

சிறுநீரக சுத்திகரிப்பு முறைகள் எந்தவித தீங்கினையும் ஏற்படுத்தாது; ஆனால், இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதற்கு எந்த வித நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை. சிறுநீரக சுத்திகரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வது எப்படி?

குறிப்பிட்ட உணவுகள் மற்றும் மூலிகைகள், அத்துடன் ஸ்மூதிகள், பழச்சாறுகள், மூலிகை தேநீர் போன்ற பானங்களை உட்கொள்ளவது போன்றவை பொதுவாக சிறுநீரக சுத்திகரிப்பிற்கு உதவுகின்றன.  சிறுநீரகங்களின் இயற்கையான நச்சு நீக்கும் இயல்பை ஆதரிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவது, மற்றும் சரியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம்.

சிறுநீரக சுத்திகரிப்புக்கு பார்ஸ்லியை எப்படிப் பயன்படுத்தலாம்?

பார்ஸ்லியில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான லூடெயின் உடலிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. ஒரு டையூரிடிக் மூலிகையான இது, சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

சிறுநீரக சுத்திகரிப்பிற்கு உதவும் முறைகள் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துமா?

அரிதான சூழலில், அதிகளவு ஆக்ஸலேட்டுகளைக் கொண்ட சுத்திகரிப்பு முறைகள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் சிறுநீரக பாதிப்பு இருந்தால், உங்கள் உடலால் கையாள முடியாத அளவிற்கு – ஆரோக்கியமான இலை கீரைகள், பயறு மற்றும் பிற காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு ஆக்ஸலேட் நெஃப்ரோபதி என்ற நிலை ஏற்படலாம். ஆக்ஸலேட் நெஃப்ரோபதிக்கு சிகிச்சை உள்ளது என்ற போதிலும், அது எப்போதாவது இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பில் சென்று முடியலாம்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top