முன்னுரை
இரத்த ஓட்டம் என்பது முக்கியமான உடல் செயல்பாடுகளில் ஒன்றாகும்; இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
இந்த கட்டுரையில் இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
இரத்த ஓட்டம்
இரத்த ஓட்டம் அல்லது இரத்த சுழற்சி மண்டலத்தில் இதயம், இரத்தக் குழாய்கள் மற்றும் இரத்தம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
1. இதயம் :
இரத்த சுழற்சி மண்டலத்தின் மையமாக இருக்கும் இதயம் - இரண்டு முக்கிய சர்க்யூட்கள் மூலம் இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் கடத்துகிறது – அதாவது சிஸ்டமிக் சர்க்யூட் (உடல் முழுவதும்) மற்றும் நுரையீரல் சர்க்யூட் (நுரையீரலுக்கும் பிறகு அங்கிருந்தும் கொண்டு வருகிறது) மூலம் இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் கடத்துகிறது.
2. இரத்தக் குழாய்கள் :
மூன்று வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. தமனிகள் என்கிற ஆர்டரீஸ் - ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திலிருந்து எடுத்துச் செல்கின்றன, வெயின்ஸ் எனப்படும் சிரைகள் - ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை இதயத்திற்குத் திருப்பி கொண்டு வருகின்றன, மற்றும் கேப்பிலரிஸ் - ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுகளின் பரிமாற்றம் நிகழும் சிறிய இரத்த நாளங்களாகும்.
3. இரத்தம் :
இரத்ததில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் (ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன), இரத்த வெள்ளை அணுக்கள் (தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகின்றன), பிளேட்லெட்டுகள் (இரத்த உறைவுக்கு உதவுகின்றன) மற்றும் பிளாஸ்மா (ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் மற்றும் கழிவுகளை சுமக்கும் திரவ கூறு) ஆகியவற்றை உள்ளாக்கியுள்ளது.
இரத்த ஓட்டம் இன்றியமையாதது!
ஹோமியோஸ்டேசிஸ் (Homeostasis) என்பது உடலின் உறுப்பு மண்டலங்களை சீராக வைத்து இருக்கும் ஒரு நிலையாகும். இந்நிலையை பராமரிக்கவும், உயிர் வாழ்வதை ஆதரிக்கவும் இரத்த ஓட்டம் என்பது மிகவும் அவசியம். சரியான இரத்த சுழற்சியானது பின்வரும் முக்கிய செயல்பாடுகளை உறுதி செய்கிறது :
1. ஆக்ஸிஜன் விநியோகம்
நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்க இரத்த ஓட்டம் முக்கியமானதாகும். சிவப்பு இரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை உடலெங்கும் கொண்டு செல்கின்றன.
உடலின் உயிரணுக்கள் ஆற்றலை உற்பத்தி செய்ய, ஆக்ஸிஜன் மிகவும் அவசியமானதாகும். போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், உயிரணுக்களால் சரியாக செயல்பட முடியாது, பின்னர் ஒட்டுமொத்த ஆரோக்கியமும், உடலில் ஆற்றல் அளவுகளும் பாதிக்கப்படும்.
2. ஊட்டச்சத்து வழங்கல்
நாம் சாப்பிட்ட பிறகு, நமது செரிமான மண்டலம் உணவை குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களாக உடைக்கிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, உடல் முழுவதும் உயிரணுக்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவை இந்த ஊட்டச்சத்துக்களை வளர்ச்சி, பழுது நீக்கம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்துகின்றன.
3. கழிவுகளை அகற்றுதல் :
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் கார்பன் டை ஆக்சைடு போன்ற கழிவுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இரத்த ஓட்டமானது இந்த கழிவுப்பொருட்களை அகற்றி நுரையீரலுக்கு கார்பன் டை ஆக்சைடையும், சிறுநீரகங்களுக்கு யூரியாவையும் கொண்டு செல்ல உதவுகிறது.
நச்சுக்கள் உடலில் சேர்வதைத் தடுக்கவும், உயிரணுக்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கழிவுகளை திறம்பட அகற்றுவது அவசியமாகும். அதற்கு இரத்த ஓட்டம் இன்றியமையாதது.
4. வெப்பநிலை கட்டுப்பாடு :
உடல் வெப்பநிலையை ஒழுங்கு படுத்துவதில், இரத்த ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் சூடாக இருக்கும்போது, தோலின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள இரத்த நாளங்கள் விரிவடைகின்றன (வேசோடைலேஷன்), அதிக இரத்தம் அங்கு செல்வதால் வெப்பம் வெளியேற அனுமதிக்கிறது.
நாம் குளிர்ச்சியாக இருக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க, அதே இரத்தக் குழாய்கள் குறுகுகின்றன (வாசோகன்ஸ்டிரிக்ஷன்). இரத்த நாளங்களின் இந்த இரண்டு செயல்முறைகளும் உடலின் சீரான செயல்பாட்டிற்குத் தேவையான நிலையான உள் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
5. நோயெதிர்ப்பு நடவடிக்கை :
இரத்த ஓட்டத்தினால் உடல் முழுவதும் வெள்ளை இரத்த அணுக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவூட்டப்படுகிறது.
இந்த வெள்ளை அணுக்கள் உடலின் பாதுகாப்புப் படையை போன்றவை, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வெளிக் காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய்களைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடுகின்றன.
நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்ய உதவும் புரதங்களான இரத்தம் ஆன்ட்டிபாடிகளையும் இரத்த ஓட்டம் உடலெங்கும் கொண்டு செல்கிறது.
இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
இரத்தத்தின் அளவு
நடுத்தர வயதுடைய நபரின் உடலில் சுமார் 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்த அளவு இதயத்தால் உடல் முழுவதும் தொடர்ந்து சுழற்சி முறையில் அனுப்பி, திரும்ப பெறப்படுகிறது.
இரத்த ஓட்டத்தின் வேகம்
இரத்த ஓட்டத்தின் போது, இரத்தமானது நிமிடத்திற்கு சுமார் 4-5 லிட்டர் என்கிற வேகத்தில் பயணிக்கிறது. அதாவது இரத்தம் இதயத்திலிருந்து, முழு உடலிலும் பயணித்துவிட்டு, மீண்டும் இதயத்திற்கு திரும்ப சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்.
இந்த நிலையான ஓட்டம் காரணமாக, ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் புதிதாக பெறுவதையும், கழிவுப் பொருட்கள் உடனுக்குடன் வெளியேற்றுவதையும் உறுதி செய்கிறது.
3. இரத்த ஓட்டம் நின்றால் என்னவாகும்
இரத்த ஓட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டால், அது சில நிமிடங்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். உடல் முழுவதும் உள்ள செல்கள் விரைவாக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழந்து, உயிரணு இறப்புக்கு மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
உயிரைத் தக்கவைக்க ஆரோக்கியமான இரத்த சுழற்சியை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை, இது தெளிவாக விளக்குகிறது.
இரத்த ஓட்ட குறைபாடுகளை ஏற்படுத்தும் காரணங்கள்
பல்வேறு காரணிகளால் மோசமான இரத்த ஓட்டம் ஏற்படலாம் :
பெருந்தமனி தடிப்பு அழற்சி (Atherosclerosis)
இந்த பாதிப்பு ஏற்பட்டால் கொழுப்பு (பிளாக்) படிவதால், தமனிகள் குறுகிப்போய் இறுகிவிடுகின்றன. இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது; திசுக்கள் மற்றும் உறுப்புகளை அடையக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவும் குறைகிறது.
இரத்த உறைவு
இரத்த நாளங்களில் உருவாகும் உறைந்த இரத்தமானது, இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம் அல்லது வேகத்தைக் குறைக்கலாம். உறைவு எங்கு உருவாகிறது என்பதைப் பொறுத்து, அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
இரத்த நாள வீக்கம் (வெரிக்கோஸ் வெயின்ஸ்)
விரிவடைந்த இரத்த நாளங்கள், முறுக்கப்பட்ட நிலைக்குச் செல்கின்றன. பெரும்பாலும் கால்களில், இந்த நிலை ஏற்படுகிறது. பலவீனமான வால்வுகள் அல்லது நாளங்களின் காரணமாக, இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஆங்காங்கே கோர்த்துக்கொள்ளும் நிலையை உண்டாக்குகின்றன.
நீரிழிவு
இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதால், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதமடையச் செய்கின்றன; இது பலவீனமான இரத்த சுழற்சிக்கு வழிவகுக்கின்றன. இந்த சேதம் இதய நோய் மற்றும் இரத்த ஓட்டம் தொடர்பான பிற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
புகைபிடித்தல்
புகையிலையில் உள்ள ரசாயனங்கள், இரத்த நாளங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகின்றன; இதனால் அவை குறைந்த நெகிழ்வுத்தன்மையுடன், சுருங்கிப் போகின்றன. இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உடல் பருமன்
அதிக எடையானது இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது; இதனால் உடல் முழுவதும் இரத்தம் திறம்பட பாய்வது கடினமாகிறது. இது பல்வேறு இரத்த சுழற்சி பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது.
குறைவான உடல் செயல்பாடுகள்
போதிய உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, தசையின் நிறையைக் குறைக்கிறது; ஆரோக்கியமான இரத்த சுழற்சியைப் பராமரிக்க தசைகள் மிக முக்கியமானவை ஆகும். உடல் செயல்பாடுகள் குறைவது, பலவீனமான இதய ஆரோக்கியம் மற்றும் மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
இயற்கையாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் 6 பானங்கள்
பின்வரும் பானங்களை அருந்துவதன் மூலம், இரத்த ஓட்டத்தை இயற்கையாகவே மேம்படுத்த முடியும்.
1. கிரீன் டீ :
கேட்ச்சின்ஸ் (catechins) எனப்படும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ, இரத்த நாளங்களின் விரிவான நிலையில் இருப்பதை ஊக்குவிப்பதன் மூலம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த விரிவாக்கம் சிறந்த இரத்த சுழற்சியை ஆதரிப்பதோடு, இருதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
2. பீட்ரூட் ஜூஸ் :
நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள பீட்ரூட் சாறு இரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவுகிறது; இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது.
இந்த விளைவு திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த இரத்த சுழற்சியை ஆதரிக்கிறது.
3. மாதுளை ஜூஸ் :
மாதுளை சாற்றில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன; குறிப்பாக பாலிஃபினால்கள் - இவை இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் இன்ஃப்ளமேஷனைக் குறைப்பதன் மூலம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது; மேலும், தமனிகளில் படிமங்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.
4. இஞ்சி தேநீர் :
இஞ்சியில் சக்திவாய்ந்த ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளதால், அவை இரத்த நாளங்களில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனைக் குறைப்பதன் மூலம், இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இருதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
5. மஞ்சள் தண்ணீர் :
மஞ்சளில் குர்குமின் என்கிற வேதிப்பொருள் உள்ளதால், இதில் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நிறைந்துள்ளது.
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆரோக்கியமான இரத்த நாளங்களைப் பராமரிப்பதற்கும், முக்கியமான எண்டோதெலியல் (endothelial) செயல்பாட்டை குர்குமின் மேம்படுத்துகிறது.
6. சிட்ரஸ் ஜூஸ் :
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி(Vitamin C) மற்றும் ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன; அவை இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவற்றை வலுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும் படிமங்கள் சேராமல் தடுப்பதால், இரத்த ஓட்டம் நன்கு நடக்க வழிவகுக்கின்றன.
போனஸ் பானம் - தண்ணீர் : தண்ணீரை ஒரு பானமா என்று நினைக்கலாம். ஆனால், ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க போதிய நீர்ச்சத்து அவசியமாகும். ஏனெனில், உடலில் போதுமான நீர் இருந்தால் மட்டுமே இரத்தம் கெட்டியாகாமல் சீரான நிலையில் இருக்கும். நீரிழப்பு ஏற்பட்டால் இரத்தம் பாகுத்தன்மையை பெற்று, இதயம் திறம்பட பம்ப் செய்வது கடினமாகிறது.
முடிவுரை
இரத்த ஓட்டம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். உடலெங்குமிருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவது, உறுப்புகள் மற்றும் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்ப்பது ஆகியவை இரத்த ஓட்டத்தினால் மட்டுமே நிகழ்கின்றன.
மேலே கூறிய பானங்கள் இயற்கையான வழியில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகின்றன. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பதே சீரான இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியமாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த சுழற்சியை எவ்வாறு பாதிக்கிறது?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இது கால்களிலும் பாதங்களிலும் இரத்தம் அதிகமாக சேர்வதற்கு வழிவகுக்கிறது. இதனால், இரத்த உறைவு மற்றும் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது; நாளடைவில் இது இதய ஆரோக்கியத்தைக் கூட பாதிக்கிறது.
2. இரத்த ஓட்ட பாதிப்பின் அறிகுறிகள் யாவை?
கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்த நிலையில் இருப்பது, மரத்துப்போவது அல்லது நமைச்சல் போன்ற உணர்வு ஏற்படுவது, கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம், சோர்வடைதல், காயங்கள் மெதுவாக குணமடைதல் மற்றும் தோல் நிறம் அல்லது அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுதல் போன்றவை, இரத்த ஓட்ட பாதிப்பின் அறிகுறிகளாகும்.
3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சிறந்த பயிற்சிகள் யாவை?
நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள், இரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகின்றன. கூடுதலாக, வலு தூக்கும் பயிற்சிகள் மற்றும் நடனப் பயிற்சிகள் ஆகியவையும் இதய ஆரோக்கியத்தையும், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றன.
4. குழந்தைகளுக்கு இரத்த ஓட்டக் குறைபாடுகள் ஏற்படுமா?
பொதுவாக குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு இந்த இரத்த ஓட்டக் குறைபாடுகள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.
ஆனால், வேறு சில உடல்நல பிரச்சினைகளால் அதிக உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இரத்த ஓட்டப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதற்காக பிசியோதெரபி உள்ளிட்ட பயிற்சிகள் மூலம், இரத்த ஓட்டத்தை சீராக வைக்க அறிவுறுத்தப்படுகிறது.