வாய் புற்றுநோய்
நமது உதடுகள், நாக்கு, ஈறுகள், கன்னங்களின் உட்புறம் ஆகியவற்றை உள்ளடக்கிய வாய் பகுதியை, ஒரு சுறுசுறுப்பாக இயங்கும் தொழிற்சாலையாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பேசுவது, உணவை உண்பது, தண்ணீர் அருந்துவது, உமிழ் நீருடன் கலந்து செரிமானத்திற்கு தயார் செய்வது, என பல்வேறு செயல்பாடுகள் அந்த தொழிற்சாலையில் நிகழ்கின்றன. தொழிற்சாலைகளில் எதாவது இயந்திரம் பழுதடைவது போலவே, நமது வாயின் ஏதேனும் ஒரு பகுதியில் அசாதரணமான ஒரு பாதிப்பு ஏற்படலாம்.
ஆரம்பத்தில், இயந்திர பிரச்சினை சிறியது போலத் தோன்றலாம், ஆனால் கவனிக்கப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சரி செய்யப்படாவிட்டால், அது தொழிற்சாலையின் மொத்த உற்பத்தியையும் பாதித்துவிடும். வாய் புற்றுநோயின் அறிகுறிகள் செயலிழந்த இயந்திரத்தைப் போன்றது தான். அறிகுறிகள் சிறியதாகத் தொடங்கும், ஆனால், சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் உங்கள் வாயின் முழு செயல்பாட்டையும் பாதித்து, பேராபத்தினை ஏற்படுத்தலாம். எனவே, வாய் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது.
இந்த கட்டுரையில் வாய் புற்றுநோயின் 10 அறிகுறிகளை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி காண்போம்.
வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறிகளைப் பார்ப்பதற்கு முன்பு, அது ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். குணப்படுத்துவதை விட, தடுப்பு சிறந்தது அல்லவா?
1. புகையிலை மற்றும் மது அருந்துதல்:
புகையிலை மற்றும் மது ஆகியவை உடலின் பல்வேறு இயக்கங்களை பாதிக்கின்றன. இவற்றின் தாக்கம் படிப்படியாக மிக ஆபத்தான நிலைகளை எட்டுகின்றன. வாயின் திசு அமைப்புகளை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை, பொதுவாக புகையிலை மற்றும் மதுவிற்கு உள்ளது.
2. HPV தொற்று:
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது ஒரு கணினியில் ஏற்படும் வைரஸ் பாதிப்பு போன்றது. வாயில் எச்பிவி(HPV) தொற்று ஏற்பட்டால், அது பல்வேறு செயல்திறன் குறைபாடுகளுக்கு வழிவகுத்து, ஆறாத புண்களை ஏற்படுத்தி, நாளடைவில் வாய் புற்றுநோயாக மாறுகிறது.
3. புற ஊதா கதிர் வெளிப்பாடு:
நீண்ட நேரம் புற ஊதா கதிருக்கு வெளிப்படுவதால், உதடுகளில் உள்ள மென்மையான திசுக்கள் சேதமடைந்து, வாய் புற்றுநோயாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
4. சரியற்ற உணவு முறை மற்றும் வாய் சுகாதாரத்தை சரியாக பேணாதது:
ஒரு தொழிற்சாலையின் உற்பத்திக்கு, தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளை புறக்கணிப்பது, எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துமோ, அதேபோல் சரியான உணவுமுறையும், வாய் சுகாதாரத்தையும் கடைப்பிடிக்காமல் போனால், பல்வேறு ஆபத்து காரணிகள் எளிதாக வாய் பகுதியை பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன. நாளடைவில் அவை புற்றுநோயாக உருமாறும் ஆபத்தும் உள்ளது.
5. மரபியல் காரணிகள்:
வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று மரபியல் காரணிகள் ஆகும். சிலருக்கு அவரது குடும்பத்தில் எவருக்கேனும் வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், சந்ததியினருக்கும் அதே பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேற்கூறிய காரணங்களில் ஏதேனும் பொருந்தும் நபர்களுக்கு, பின்வரும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், தயவுசெய்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வாய் புற்றுநோயின் பத்து ஆபத்தான அறிகுறிகள்
1. கொப்புளங்கள் மற்றும் புண்கள்:
வாய் புற்றுநோய் பெரும்பாலும் தொடர் புண்களாக ஏற்படும், அவை சில வாரங்களுக்குள் குணமடையாது. இந்த புண்கள் நாக்கு, ஈறுகள் அல்லது வாயின் உட்புற படலம் ஆகியவற்றில் சிவப்பு அல்லது வெள்ளை நிற திட்டுகளாக காணப்படும். பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் குணமாகும் சாதாரண வாய் புண்களைப் போல இல்லாமல் புற்றுநோய் புண்கள் நீண்ட நாள் ஆறாமல் இருக்கும்; காலப்போக்கில் இவை பெரிதாக வளரலாம். சில நேரங்களில் அதிக வலி அல்லது இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.
2. கட்டிகள் மற்றும் வீக்கம்:
சிலரது கன்னத்தில் ஒரு கட்டி அல்லது தடித்திருப்பது போல காணப்படலாம். இது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். தாடையில் வீக்கம் ஏற்படுவதால், பற்களுடன் பொருந்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கழுத்தில் கட்டி அல்லது வீக்கம் போன்றவை வாய் புற்றுநோயைக் குறிக்கலாம்.
அதாவது அருகிலுள்ள நிணநீர் மண்டலங்களுக்கும் அது பரவியுள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சாதாரணமான நோய்த்தொற்றுகள் அல்லது காயங்களால் ஏற்படக்கூடிய இலகுவான மற்றும் சீரான வீக்கம் போல இல்லாமல், இந்த கட்டிகள் மற்றும் வீக்கங்கள் கடினமாகவும், ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும்.
3. சாப்பிடுவதிலும் விழுங்குவதிலும் சிரமம்:
வாய் புற்றுநோய் இருந்தால் மெல்லும்போது அல்லது விழுங்கும்போது சிரமம் அல்லது வலி இருக்கும். சாதாரண தொண்டை புண்களாலும் இதே அறிகுறிகள் ஏற்படலாம், ஆனால் அவை தற்காலிகமானவை, குணமடைந்து விடும். ஆனால், இவை நீண்ட காலம் நீடிக்கும். வாயில் காரணம் தெரியாத இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்; குறிப்பாக பல் துலக்கிய பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு இப்படி ஏற்படலாம். இந்த சிக்கல்கள் காலப்போக்கில் தீவிரமடைந்து, சில நேரங்களில் கடும் எடை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கூட ஏற்படுத்தும்.
4. உணர்திறனில் மாற்றங்கள்:
வாய் அல்லது உதடுகளில் உணர்வின்மை அல்லது வலி ஏற்படுவது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். கூடவே, நாக்கு அல்லது தாடையை நகர்த்துவதில் சிரமம் ஏற்படலாம், இது பேச்சு மற்றும் உண்பதை பாதிக்கிறது. வேறு எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல், ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும் காது வலி சில நேரங்களில் வாய் புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இந்த உணர்திறன் மாற்றங்கள் பெரும்பாலும் படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் சாப்பிடுவது, பேசுவது அல்லது உணவை உண்பது என அன்றாட நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கலாம்.
5. தொண்டையில் வெளிப்படும் அறிகுறிகள்:
தொடர்ச்சியான தொண்டை புண் அல்லது தொண்டை கரகரப்பு ஆகியவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். வாய் புற்றுநோயைப் பொருத்தவரை, கழுத்து அல்லது தொண்டையில் உள்ள வலி நீங்காது. மருத்துவ நிபுணரால் மட்டுமே உரிய நோயறிதல் சோதனை மூலம், அதன் காரணத்தைக் கண்டறிய முடியும்.
சிறிய நோய்கள் அல்லது ஒவ்வாமைகளால் அவ்வப்போது ஏற்படும் அசௌகரியத்தைப் போல இல்லாமல், நிலைமையில் நல்ல முன்னேற்றம் இல்லாமல் பல வாரங்கள் அல்லது மாதங்கள் அசௌகரியம் நீடிப்பதோடு, காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகவும் மாறிவிடும்.
6. பற்களில் ஏற்படும் மாற்றங்கள்:
வாய் புற்றுநோய் இருந்தால், எந்தவொரு வெளிப்படையான பல் பிரச்சினையும் இல்லாமல், பற்களின் அமைப்பு தளர்வது போன்ற மாற்றங்கள் ஏற்படும். வாயின் வடிவம் அல்லது பற்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, பல் உபகரணங்களான பிரேஸ் போன்றவற்றை அணிவதில் சிரமம் ஏற்படலாம்.
சரியாக பொருந்தாத பல் உபகரணங்களால், அவற்றின் அமைப்பில் சிறிய மாற்றங்கள் அல்லது அசௌகரியங்கள் இயல்பாக ஏற்படலாம்; இவை பல் மருத்துவரால் சரிசெய்யக்கூடிய எளிய பிரச்சினைகள் தான். ஆனால், வாய் புற்றுநோயாக இருப்பின் என்ன சிகிச்சை பெற்றாலும் நிவாரணம் கிடைக்காது, நிலைமையும் மேலும் மோசமடையும்.
7. சுவாசிப்பது மற்றும் குரலில் மாற்றங்கள்:
இயல்பான குரல் கரகரப்பாகவும், குளறுவது போல மாறுவதும் வாய் புற்றுநோயின் காரணமாக ஏற்படலாம். தொடர்ச்சியான இருமல் அல்லது இரத்த இருமல் ஆகியவையும் சுவாசக் குழாயில் புற்றுநோய் பரவியதற்கான அறிகுறியாக இருக்கலாம்; குறிப்பாக புற்றுநோயால் ஏற்படும் குரல் மாற்றங்கள் மற்றும் சுவாச அறிகுறிகள் படிப்படியாக மோசமடைவதாக இருக்கும்; சில நேரங்களில் சுவாசிப்பதில் அல்லது பேசுவதில் சிரமம் ஏற்படுவதோடு, சோர்வு அல்லது எடை இழப்பு போன்ற பிற அறிகுறிகளும் வெளிப்படலாம்.
8. பொதுவான உடல் நிலை மாற்றங்கள்:
விவரிக்கப்படாத எடை இழப்பு என்பது வாய் புற்றுநோய் உட்பட, பல வகையான புற்றுநோய்களின் மிகப் பொதுவான ஒரு அறிகுறியாகும். நாள்பட்ட சோர்வு இருக்கும்; போதுமான ஓய்வு இருந்தபோதிலும் எல்லா நேரத்திலும் சோர்வான உணர்வே இருக்கும்.
மன அழுத்தம் அல்லது வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படும் தற்காலிகமான எடை ஏற்ற இறக்கங்கள் அல்லது மனச்சோர்வு போலல்லாமல், இந்த மாற்றங்கள் தொடர்ந்து நீடிக்கும், அதேபோல மேலும் தீவிரமடையும். தொடர்ந்து சாப்பிடுவதில் சிரமம் அல்லது வலி போன்ற பிற அறிகுறிகளும் இதனுடன் சேர்ந்து ஏற்படலாம்.
9. வாய் அசௌகரியம்:
ஹேலிடோசிஸ் என்கிற தொடர்ச்சியான வாய் துர்நாற்றம், குறிப்பாக வாய் சுகாதார செயல்பாடுகளை மேம்படுத்தியும் தீர்க்கப்படாவிட்டால், அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
சாப்பிடும் உணவு அல்லது பானங்கள், மோசமான வாய் சுத்தம் அல்லது வரட்சியான வாய் போன்ற தற்காலிகமான பாதிப்புகளால், வாய் துர்நாற்றம் ஏற்படுவது போலல்லாமல் இந்த வாய் துர்நாற்றம் தொடர் வைத்தியம் மூலம் மேம்படாது; ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது சுவை மாற்றங்கள் போன்ற பிற அறிகுறிகளும் வாய் புற்றுநோயைக் குறிக்கலாம்.
10. இதர அறிகுறிகள்:
வாய் புற்றுநோயால் ஏற்படும் வாயின் வடிவ மாற்றங்கள் அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, பல் சீரமைப்பு உபகரணங்கள் அணிவதில் சிரமம் ஏற்படலாம்.
இது புற்றுநோயுடன் தொடர்புடைய அசௌகரியம் அல்லது வலியின் விளைவாகவும் ஏற்படலாம். சரியாகப் பொருந்தாத பல் சீரமைப்பு உபகரணங்களால் ஏற்படும் சாதாரணமான பிரச்சினைகள் போலல்லாமல் – என்ன சிகிச்சை எடுத்தாலும் இந்த சிரமம் சரியாகாது. காலப்போக்கில் அறிகுறிகள் மோசமடைந்து, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும்.
அறிகுறிகளை அறிந்து கொள்வது முக்கியம் என்றாலும், புற்றுநோயைப் பற்றிய சில தவறான கருத்துக்களையும் அறிந்து தெளிவு பெறுதல் வேண்டும்.
புரிந்துக்கொண்டு தெளிவு பெறவேண்டிய வாய் புற்றுநோய் பற்றிய தவறான கருத்துக்கள்
1. புகைபிடிக்கவில்லை அல்லது மது அருந்தவில்லை என்றால், வாய் புற்றுநோய் வராது என்பது தவறான கருத்து – புகையிலையைத் தவிர்ப்பது மற்றும் மது உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது, வாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். ஆனால், இப்பழக்கம் இல்லாமல் எச்பிவி(HPV) தொற்று, புற ஊதா கதிர் வெளிப்பாடு, மோசமான உணவு முறை மற்றும் மரபியல் போன்ற இதர காரணிகளாலும், வாய் புற்றுநோய் ஏற்படலாம்.
2. வாய் புற்றுநோய் எப்போதும் வலியுடன் வெளிப்படும், எனவே புற்றுநோய் இருந்தால் உங்களுக்குத் தெரியும் என்பது தவறானது – வலி என்பது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்றாலும், புற்றுநோயின் எல்லா அறிகுறிகளும் வலிமிகுந்தவையாக இருக்காது; குறிப்பாக ஆரம்ப கட்டங்களில், வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு நோய் முன்னேறும் வரை வலி அல்லது அசௌகரியம் ஏற்படாது. எனவே, ஆறாத புண்கள், கட்டிகள் அல்லது உணர்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பிற அறிகுறிகள் பற்றி விழிப்புடன் இருப்பது முக்கியம் ஆகும்.
3. வாய் புற்றுநோய் வெளியே தெரியும், கண்டறியவும் எளிதானது என்பது பொய் – தொடர்ச்சியான புண்கள் அல்லது கட்டிகள் போன்ற வாய் புற்றுநோயின் சில அறிகுறிகள் வெளியே தெரியும் என்றாலும், மற்றவை, உணர்திறனில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது விழுங்குவதில் சிரமம் போன்றவையாகும். அவை வெளிப்படையாக இருக்காது. ஆரம்ப நிலையில் இதை கண்டறிய, வழக்கமான பல் பரிசோதனைகள் மற்றும் வாய் புற்றுநோய் சோதனைகள் அவசியம் ஆகும்.
4. வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமே தாக்குமென்பது கிடையாது – பெண்களை விட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகம் காணப்பட்டாலும், பெண்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல், வாய் புற்றுநோயின் ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பது அவசியம் ஆகும்.
5. அதிகப்படியாக மது அருந்துபவர்களுக்கு மட்டுமே வாய் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்ற கருத்து தவறானது – அதிகப்படியான மது உட்கொள்வது வாய் புற்றுநோய்க்கான ஆபத்து காரணி என்றாலும், மிதமாக மது அருந்துபவர்களுக்கும் வாய் புற்றுநோய் ஏற்படலாம். புகையிலை மற்றும் மது இரண்டையும் பயன்படுத்தும் நபர்களுக்கு தனியாக அவற்றை பயன்படுத்துபவர்களை விட புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
6. புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வாய் புற்றுநோய் வரும் என்பது உண்மையல்ல – புகைபிடித்தல் மற்றும் புகையில்லா புகையிலை உள்ளிட்ட எந்த விதமான புகையிலை பயன்பாடும் வாய் புற்றுநோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணி தான். புகைபிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் உருவாகலாம். அதிகப்படியான மது உட்கொள்வது, எச்பிவி(HPV) தொற்று, புற ஊதா வெளிப்பாடு, மற்றும் மரபியல் போன்ற பிற காரணிகளும் வாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
முடிவுரை
வாய் புற்றுநோய் சிகிச்சை நல்ல பலனளிப்பதற்கு வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மிக அவசியமாகும். தொடர்ந்து ஆறாத புண்கள் உள்ளிட்ட அறிகுறிகள், அதன் காரணங்கள், மற்றும் வாய் புற்றுநோய் பற்றிய தவறான கருத்துக்களை புரிந்துக்கொள்வதன் மூலம் – விழிப்புணர்வுடன் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் அல்லது ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்று குணமடையலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. வாய் புற்றுநோய் எளிதில் சிகிச்சையளிக்கக்கூடிய பிரச்சினையா?
இல்லை, ஆரம்பத்தில் கண்டறியப்படாவிட்டால் வாய் புற்றுநோய் உயிருக்கு ஆபத்தானது. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு அல்லது கீமோதெரபி போன்றவை தேவைப்படலாம். புற்றுநோய் நிலை மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் சிகிச்சை முறைகள் மாறுபடும்.
2. வாய் புற்றுநோய் என்பது ஒரு தொற்றுநோயா?
இல்லை, வாய் புற்றுநோய் தொற்றுநோயல்ல. இருப்பினும், எச்பிவி(HPV) தொற்று போன்ற சில ஆபத்து காரணிகள் நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
3. உரிய சிகிச்சையளிக்கப்பட்ட பிறகும் வாய் புற்றுநோய் மீண்டும் வருமா?
வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் புற்றுநோய் செல்களை அகற்ற முடியும் என்றாலும், அடிப்படை ஆபத்து காரணிகள் தொடர்ந்தால் மீண்டும் ஏற்படும் ஆபத்து உள்ளது.
4. வாய் புற்றுநோயில் எத்தனை நிலைகள் உள்ளன?
வாய் புற்றுநோய் பொதுவாக நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது, ஆரம்ப கட்ட கட்டிகள் முதல் தீவிரமான கட்டிகள் வரை ஏற்படலாம். அது அருகிலுள்ள திசுக்கள் அல்லது தூரத்தில் உள்ள உறுப்புகளுக்கு பரவும் நிலைக்கு செல்லலாம்.
5. வாய் புற்றுநோயை எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறியை வைத்து உறுதிப்படுத்த முடியும்?
வாய் புற்றுநோயை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய எந்த ஒரு அறிகுறியும் கிடையாது. இருப்பினும், வாய் புண்கள், கட்டிகள் அல்லது விழுங்குவதில் சிரமம் போன்ற தொடர்ச்சியான அறிகுறிகள் நீடித்தால், மருத்துவரை அணுக வேண்டும். அவரால் மட்டுமே வாய் புற்றுநோயை உரிய பரிசோதனைகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடியும்.