பலவிதமான உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கையே சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த நவீன உலகில் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறோமோ, அந்தளவிற்கு நாம் இயற்கையைவிட்டு தூரமாக சென்றுகொண்டிருக்கிறோம். தாவரங்கள் மற்றும் மூலிகைகள் மூலம் பல நோய்களுக்கு இயற்கை நமக்கு மருந்துகளை வழங்குகிறது.
நோய்களைக் குணப்படுத்தும் அல்லது சிகிச்சைக்கு உதவக்கூடிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளே ‘மருத்துவ தாவரங்கள்' எனப்படுகின்றன. பண்டைய காலத்திலிருந்தே பல்வேறு நோய்களுக்கு எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் சிகிச்சையளிக்க எண்ணற்ற மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள சிறந்த 5 மூலிகைத் தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த 5 மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
1. துளசி (தெய்வீக மகத்துவம் வாய்ந்த பேசில்)
துளசி தாவரத்திற்கு தனித்துவமான மருத்துவ குணங்கள் உள்ளதால், இது 'மூலிகைகளின் ராணி' என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்து மதத்தை பின்பற்றும் பல குடும்பங்களின் தோட்டங்களில் வளர்க்கப்படும் முக்கிய தாவரமாக துளசி உள்ளது.
துளசி இலைகளில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்களும், பூஞ்சைகளை எதிர்க்கும் பண்புகளும் நிறைந்துள்ளன. எனவே, சளி மற்றும் காய்ச்சலுக்கு துளசி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு (பிரான்கைட்டிஸ்) சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ ஃபார்முலேஷன்களில் துளசி இலைகள் முக்கிய உட்பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன.
சளி தொந்தரவிற்கு சிகிச்சையளிப்பதற்கு மட்டுமில்லாமல், இது செரிமான பிரச்சினைகளையும் சீராக்கி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தி, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
2. கற்றாழை
கற்றாழை, பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் மற்றொரு பிரபலமான மருத்துவ தாவரமாக உள்ளது. புதர் தாவரங்களில், கற்றாழை அதன் அழகியல் சார்ந்த நன்மைகளுக்காக இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகவுள்ளது.
அழகு சார்ந்த எண்ணற்ற நற்பலன்களுக்காக கற்றாழை பெயர் பெற்றது; இது சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது. எனவே, ஹேர் ஜெல், ஃபேஸ் வாஷ் போன்ற அழகு சாதனப் பொருட்களில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
அழகியல் சார்ந்த நன்மைகள் மட்டுமில்லாமல், கற்றாழையில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், ஆன்ட்டி-மைக்ரோபியல் பண்புகள் மலச்சிக்கலை குறைக்கவும், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும், காயங்களுக்கு சிகிச்சை தரவும் உதவுகின்றன.
3. வெந்தயம்
பொதுவாக 'வெந்தயம்' என்று அழைக்கப்படும் மேதி பலவிதமான மருத்துவ குணநலன்களைக் கொண்டுள்ளது. வெந்தய விதைகள் பன்னெடுங்காலமாக இந்திய குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சமையல் மூலப்பொருளாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக, வெந்தயம் ஒரு மசாலாப் பொருளாகவும், மருத்துவ குணமிக்க மூலிகையாகவும் பலராலும் உபயோகிக்கப்படுகிறது.
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் கேலக்டகாக் பண்புகள் வெந்தயத்திற்கு உள்ளது. வெந்தய விதைகளின் மருத்துவ குணங்கள் போஸ்ட் மென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் (PMS) மற்றும் மாதவிடாய் அறிகுறிகளுக்கு நிவாரணம் தரவும் உதவுகின்றன. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சீராக்கவும் வெந்தயம் உதவுகிறது.
வெந்தய விதைகளில் உள்ள சபோனின்ஸ் எனப்படும் ஸ்டெராய்டு கூறுகள் நமது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் (நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது), நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வெந்தய விதைகள், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
4. அஸ்வகந்தா
மிகவும் பிரபலமான மருத்துவ தாவரமான அஸ்வகந்தாவின் வேர்கள், இலைகள் மற்றும் பழங்கள் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆனால் அதன் வேர்களே மிகச்சிறந்த நற்பலன்களுடன் கவனத்தை ஈர்க்கிறது. அஸ்வகந்தா வேர்கள் பலவிதமான மருத்துவ சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
அஸ்வகந்தா தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் அஸ்வகந்தா – கருவுருவாக்க திறனை அதிகரிக்கவும், டெஸ்டோஸ்டிரோன் அளவினை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
5. நெல்லிக்காய்
'இந்திய கூஸ்பெரி’ என்றும் அழைக்கப்படும் நெல்லிக்காய் புளிப்பு சுவை கொண்ட ஒரு கனியாகும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C ஒரு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் கூறுகள் கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. நெல்லிக்காயை தவறாமல் உட்கொள்வதன் மூலம் கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்கலாம்; ஏனெனில், அதிலுள்ள கரோட்டின் கூறுகள் கண் சிவந்து போதல், கண்புரை, கண் எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் இருப்பதால், கீல்வாதம் (ஆர்த்ரிட்டிஸ்) காரணமாக மூட்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. முடி உதிர்வைக் குறைத்து, தலையின் ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கூந்தலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது; இதன் காரணமாக நெல்லிக்காய் கூந்தலுக்கான எண்ணெய் தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முடிவுரை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலானது ஐந்து வகையான இந்திய மருத்துவ தாவரங்களைப் பற்றிய தகவல்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது; ஆனால் இந்தியாவில் பல மருத்துவ தாவரங்கள் உள்ளன. வாழை இலைகளில் பரிமாறப்படும் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதிகளவிலான நன்மைகளைப் பெற முடிவதோடு, புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தையும் தடுக்கலாம்.
வாழை இலைகளில் காணப்படும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பாலிபினால்ஸ் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, இந்த இலைகளில் உள்ள தாவர அடிப்படையிலான ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் உணவில் உள்ள கிருமிகளையும் அழிக்கின்றன.
அபாரமான குணமளிக்கும் ஆற்றலைக் கொண்ட இத்தகைய மருத்துவ தாவரங்கள் - சில நேரங்களில் ஆச்சரியமூட்டுபவையாகவும், வேடிக்கையானதாகவும் தோன்றலாம்; வேர்கள், பழங்கள் மற்றும் இலைகளில் இத்தகைய நன்மைகளை வழங்கும் இயற்கையின் ஆக்கபூர்வமான படைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயம் தான். ஒவ்வொரு மருத்துவ தாவரத்திற்குமென ஒரு தனித்துவமான மருத்துவ குணமுள்ளது; அதை ஆராய்ந்து, சரியாக உபயோகித்து பயனடையுங்கள்.
நீங்கள் ஏதேனும் அலோபதி மருந்துகளை ஏற்கனவே எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக மருத்துவ தாவரங்களைச் சேர்ப்பதற்கு முன் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது அவசியமாகும்..