கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 6 பழங்கள் – இன்றே சாப்பிடத் தொடங்குங்கள்!

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

கோடையும், பழங்களும் ஒரு அறிமுகம் வெப்பத்தை சமாளிக்க இயற்கை செய்துள்ள ஒப்பந்தம்

சுட்டெரிக்கும் கோடை என்பது நமக்கு புதிதான ஒன்றல்ல. மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வந்துவிட்டால் போதும், குழந்தைகளுக்கு விடுமுறை நாட்கள் கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ, நமக்கு கோடையின் வெயில் திண்டாட்டமாகவே இருக்கும். என்னதான் திடகாத்திரமான ஆளாக இருந்தாலும் சரி, வெப்பம் எவரையும் களைப்படையச் செய்துவிடும்.

இருந்தாலும் நாம் எத்தகைய சூழலையும் சமாளித்து வாழப் பழகிவிட்டோம். கோடைக்காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. கோடையின் வெப்பத்தை சமாளிக்க நமக்கு கிடைத்த முக்கியமான வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் – பழங்கள்! அக்னியின் கோர தாண்டவம் நம்மை சோதித்தாலும், நம்மை பாதுகாப்பதற்காகவே சில பழங்களும் படைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பழங்கள் கோடையை சமாளிக்க நமக்கு உதவுமென்றும், எந்தந்த பழங்களை நாம் தவிர்க்கலாம் அல்லது அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பதிவில் காண்போம்.

மனிதர்களும் பழங்களும்

நமக்குத் தெரிந்த வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே மனிதர்கள் பழங்களை உண்ணத் தொடங்கினர், இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் சாப்பிடத் துவங்கிய முதல் திட உணவு பழங்களும், இலைகளுமாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாமிசங்களை சாப்பிடத் துவங்கிய பின்னரும் கூட உணவுப் பட்டியலில் இன்றியமையாத ஒன்றாக பழங்கள் இருந்து வருகின்றன. வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல், பழங்களின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காகவும் இன்றளவும் அவை இன்றியமையாத ஒன்றாக உள்ளன. இதன் காரணமாகவே, சுமார் 10,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் பழங்களைத் திட்டமிட்டு பயிரிடத் தொடங்கினார்கள்; பின்னர் ‘எந்தெந்த பழங்கள் – சாப்பிட ஏற்றது, சாப்பிட விஷமானது, எது சுவையானது, எது எளிதாக விளைவிக்கக் கூடியது, எந்த பகுதியில் எந்த மாதிரியான பழங்கள் விளையும், அவற்றின் உற்பத்தியை எப்படி அதிகரிப்பது’ என பலவற்றை மனிதர்கள் கற்றுக்கொண்டார்கள். இதன் அடிப்படையில் எந்தெந்த பருவநிலைக்கு எப்படிப்பட்ட பழங்களை சாப்பிடலாம் என்பதை ஊகித்து அறிவு பூர்வமாக புரிந்து கொண்டு, மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட பழங்களை சாப்பிட்டு, இன்றளவும் பலனடைந்து வருகின்றனர்.

பழங்களின் அடிப்படை குணநலன்கள்

பழங்களில் இல்லாத நிறமே இல்லை என்று சொல்லுமளவுக்கு எண்ணற்ற நிறங்களிலும், வடிவங்களிலும் அவற்றை இயற்கை நமக்கு வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பழங்களும் அதற்கென தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளன. ஆச்சரியமூட்டும் விதமாக துர்நாற்றமாக கருதப்படும், ஆனால் சாப்பிடக் கூடிய துரியன் போன்ற பழங்களும் உண்டு. எந்தவொரு உணவுப் பண்டத்தின் முக்கிய அம்சமான ‘சுவை’ என்று வருகையில், அறுசுவைகளில் எல்லாமுமே பழங்களில் உள்ளன.

பழங்களின் மிக முக்கியமான, மற்றும் தனித்துவமான குணாதிசயங்களில் ஒன்று தான் அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் – வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களை அவை நம் உடலுக்கு வழங்குகின்றன. அவற்றில் இயற்கையாகவே உள்ள ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற பலவகையான சர்க்கரைகள், நம் உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன. பொதுவாக பழங்களின் ஒவ்வொரு சுவையும் அதன் உள்ளே இருக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களைக் குறிக்கின்றன.

இப்படி அதிசயத்தக்க குணநலன்களைக் கொண்ட பழங்களில் கோடைக்காலத்தின் வெப்பத்திற்கு ஏற்ற பழங்கள் யாவை என்பதை இப்போது நல்லதொரு புரிதலுக்குப் பின் தெரிந்துகொள்ளலாம்.

கோடைக்காலத்தில் நம் ஆரோக்கித்திற்கு உதவும் 6 பழங்கள்

1. தர்பூசணி

கோடைக்காலம் வந்துவிட்டது என்றவுடன், ஏதாவது பழம் சாப்பிடலாமா என்று கேட்டால்… பலரும் சொல்லும் முதல் பழம் தர்பூசணியாகவே இருக்கும். அந்தளவிற்கு பிரபலமான இந்த தர்பூசணியில் அப்படி என்ன தான் உள்ளது? தண்ணீர்! ஆம், இந்த பழத்தில் கிட்டத்தட்ட 92% தண்ணீர் மட்டுமே இருக்கிறது. வெறும் தண்ணீருக்கா இந்த மவுசு? என்று தோன்றலாம். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் நமது தாகத்தைத் தணித்து நீர்ச்சத்தினைத் தரச் சிறந்தது சுத்தமான தண்ணீரைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!

வெறும் தண்ணீருக்காக மட்டும் தர்பூசணிக்கு இந்த பிரபல்யம் கிடைத்துவிடவில்லை. வைட்டமின்கள் A மற்றும் C நிறைந்த தர்பூசணி நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதோடு, கோடையில் சருமத்தை ஆரோக்கியமாக பேணவும் உதவுகிறது. லைகோஃபீன் போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் இருப்பதால் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாத்து சருமப் பிரச்சினைகளைத் தடுக்கிறது. இதிலுள்ள சிட்ருலின் என்கிற மூலக்கூறு, இரத்த நாள விரிவாக்கத்தை ஊக்குவிப்பதால், இதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. மேலும், தர்பூசணி சாறு இயற்கையான இனிப்பு ஆற்றலை அளிப்பதோடு, புத்துணர்ச்சியூட்டும் மாற்று குளிர்பானமாகவும் அமைகிறது. ஆக, தர்பூசணி கோடையில் சாப்பிடுவதற்கேற்ற குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஒரு முதன்மையான பழமாக உள்ளது.

2. கிர்ணிப்பழம்

மஸ்க் மெலன், ராக் மெலன், கேன்ட்டலூப் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கிர்ணிப்பழத்திலும் தர்பூசணிக்கு நிகரான நீர்ச்சத்து உள்ளது. கோடைக்காலத்தில் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்களைத் தரும் இந்த பழத்திலும் சுமார் 90% தண்ணீர் உள்ளதால், வெப்பத்தால் நம் உடலில் ஏற்படும் நீரிழப்பினை ஈடுசெய்ய இது பெரிதும் உதவுகிறது. வைட்டமின் A மற்றும் C நிறைந்துள்ள கிர்ணிப்பழம் தர்பூசணி போன்றே சரும ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு ஆற்றலுக்கும் ஆதரவளிக்கிறது. கோடையில் மிதமான உடற்பயிற்சியுடன், உணவு முறை மூலம் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் இயற்கையான இனிப்பு சுவை கொண்ட கிர்ணிப்பழம், ஒரு அட்டகாசமான தேர்வாக இருக்கும். பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இந்தப் பழம், கண்களின் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. கோடைக்காலத்தில் வெயிலுக்கு பயந்து பலரும் உடல் இயக்கங்களை குறைவாக வைப்பதால், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. கிர்ணியில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. புத்துணர்வூட்டும் சுவைக்காகவே கிர்ணி பழத்தை பலரும் கோடையில் தேடிச்சென்று ஜூஸாக அருந்துவார்கள்.

3. சிட்ரஸ் பழங்கள் – எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி

இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தை போன்றவை கோடைக்காலத்திற்கு ஏற்ற பழங்களின் பட்டியலில் தவிர்க்க இயலாதவையாக உள்ளன. இவற்றில் வைட்டமின் C அதிகமாக இருப்பதன் காரணமாக அதிக புளிப்பு சுவை கொண்டதாக இருந்தாலும், உற்சாகமூட்டும் இயற்கையான குளிர்பானங்களைத் தேடும் நபர்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்றாக சிட்ரஸ் பழச்சாறுகள் உள்ளன. கோடையில் தூசு காரணமாக ஏற்படும் சளி போன்ற சுவாசத் தொற்றுகளுக்கு, இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலை இந்த சிட்ரஸ் பழங்கள் வழங்குகின்றன. உடலின் நீரிழப்பை ஈடுசெய்ய உதவும் இந்தப் பழச்சாறுகள், செரிமானத்திற்கு உதவுகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, பம்ப்ளிமாஸ் போன்ற பழங்களை ஜூஸ் பிழியாமல் அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது, அப்போது அதில் உள்ள நார்ச்சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கின்றன. சிட்ரஸ் பழங்களின் ஒரு வகையான நார்த்தம் பழத்தை நம்மில் பலரும் மறந்துவிட்டோம். கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும் நார்த்தை வெகுவாக பலருக்கும் பிடிக்காது என்ற போதிலும், அதற்கு அற்புதமான மருத்துவ குணநலன்கள் உள்ளன. பித்தம் அதிகம் உள்ளவர்கள் காலை வேளையில் இந்த பழத்தின் சாற்றினை அருந்தினால் பித்தம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. கோடையில் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கும் நார்த்தை போன்ற சிட்ரஸ் பழங்கள் நல்ல நிவாரணம் தரும்.

4. வெள்ளரிப்பழம்

காகமும், நரியும் கூட்டு சேர்ந்து வெள்ளரிப்பழம் பயிர் செய்த நீதிக்கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வெள்ளரிக்காய் பலருக்கும் தெரியும், ஆனால் நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு வெள்ளரிப்பழத்தை அரிதாகவே தெரிய வாய்ப்புள்ளது. காரணம் வெள்ளரிப்பழம் தோட்டத்தில் பறித்த பிறகு வெகுதூரம் எடுத்து செல்ல ஏதுவான பழம் கிடையாது. எனவே கிராமப்புறங்களில் விருப்பமான கோடைகால குளிரூட்டும் பழமாக வெள்ளரிப்பழம் சாப்பிடப்படுகிறது. பொதுவாக பழங்களில் கிடைக்கும் வைட்டமின் C-யுடன் சேர்த்து, இதில் அதிகளவில் பொட்டாசியமும் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது. B1, B6 மற்றும் K போன்ற வைட்டமின்களும், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இதில் கணிசமான அளவில் உள்ளன. நார்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளரிப்பழம் செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கோடையில் இரவில் புழுக்கம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு வெள்ளரிப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வருவதாக அறியப்படுகிறது.

5. நுங்கு (ஐஸ் ஆப்பிள்)

கோடைக்காலத்தில் சாப்பிட சிறந்த பழங்கள் என்ற பட்டியலில் நுங்கு இல்லையென்றால், பட்டியல் முழுமை பெறாது என்பதே நிதர்சனம். ஐஸ் ஆப்பிள் என்றும் அழைக்கப்படும் நுங்கு தற்போது அரிதாகிவரும் ஒரு அற்புதமான கோடை விருந்தாகும். பனைமரம் தரும் வரம் என்றும் இதனைக் கூறலாம். பனம்பழம் பழமாக முற்றுவதற்கு முந்தைய நிலையில் நுங்கு பறிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஜெல்லி போன்று இருக்கும் நுங்கு, கோடைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறைவான கலோரி மற்றும் குறைவான நார்ச்சத்து உள்ள நுங்கில், கால்சியம் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து, பொட்டாசியம், மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் உடலின் கழிவுகளை நீக்க பெரிதும் உதவுகின்றன. உடலை உஷ்ணமாக்கும் செயற்கையான ஐஸ் கிரீம், உடலுக்கு கேடு விளைவிக்கும் டெசர்ட் போன்ற சில்லென்ற உணவுகளுக்கு மாற்றாக – கோடைக்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு நுங்கினை வாங்கித் தரலாம். எந்தவித கேடும் இல்லாமல் குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாகயும், மனதை உற்சாகமாகவும் வைத்திருக்க நுங்கு உதவுகிறது. இதனை சாப்பிடுவதையே ஒரு அலாதியான இன்பமாக பலரும் கருதுவதுண்டு. நுங்கினை இயற்கை முறையில் செய்யப்பட்ட நன்னாரி சர்பத் மற்றும் எலுமிச்சை  ஆகியவற்றுடன் கலந்து குளிர்பானமாகவும் அருந்தலாம்.

6. வாட்டர் ஆப்பிள் (ரோஸ் ஆப்பிள்)

ஜம்புக்காய் என்று அழைக்கப்படும் வாட்டர் அல்லது ரோஸ் ஆப்பிளை ஏதோ வெளிநாட்டு பழம் என்று கருத வேண்டாம்.  Syzygium aqueum என்ற தாவர இனத்தை சேர்ந்த இது பெல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பலருக்கும் பரிச்சயமில்லாத இந்த வாட்டர் ஆப்பிள் எப்படி கோடைக்காலத்திற்கான முக்கிய பழங்களின் பட்டியலில் சேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம்! இதன் பெயருக்கு ஏற்றது போல வாட்டர் ஆப்பிளில் சுமார் 90% நீர்ச்சத்து உள்ளது. கோடையில் சரும வறட்சியை தடுக்கும் பண்பு இதற்கு உள்ளது. வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் மிகுதியாக உள்ளன. குறிப்பாக இதில் உள்ள ஜம்போசைன் என்கிற பயோஆக்டிவ் ஆல்கலாய்டு மூலக்கூறு நமது உடல் மாவுச்சத்தினை சர்க்கரையாக மாற்றுவதைத் தடுக்கிறது; எனவே கோடைக்காலத்தில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பலன் தரும் பழமாக உள்ளது.

இதர பழங்கள்

அனைத்து விதமான பழங்களும் ஏதோ ஒரு வகையில் எப்போதும் சாப்பிட சிறந்ததாக இருந்தபோதும் மேற்கூறிய பட்டியலில் நீர்ச்சத்து அதிகமுள்ள காரணத்தினால் அவற்றுள் சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. கோடைக்காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் மாம்பழம், அன்னாசிப்பழம், மாதுளை, கொய்யா, சப்போட்டா போன்ற கனிகளையும் உட்கொள்ளலாம். பழங்கள் எப்படிப் பலவகைப்படுமோ அப்படியே, அதன் ஊட்டச்சத்துக்களும் எண்ணற்றவையாக உள்ளன. எனவே, பொதுவாக பழங்களை ஜூஸாக அல்லாமல் அப்படியே சாப்பிடுவது சிறந்தது. குறிப்பாக, பல்வேறு பழங்களை உள்ளடக்கிய சாலட்-ஐ சாப்பிடுவதால், ஊட்டச்சத்துகள் சமச்சீரான அளவில் நம் உடலுக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

கோடையில் தவிர்க்க வேண்டிய அல்லது மிதமாக சாப்பிட வேண்டிய பழங்கள்

தவிர்க்க வேண்டிய அளவிற்கு தீமை தரும் பழம் என்று குறிப்பாக எதுவுமில்லை. ஆனால் கோடைக்காலத்தில் உடலை சூடுபடுத்தும் பழங்களான பேரிச்சம்பழம், அத்திப்பழம், பலாப்பழம் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அதிக சர்க்கரை நிறைந்த வாழைப்பழ வகைகள், திராட்சை, லிச்சி, ரம்பூட்டான், பலாப்பழம் போன்றவற்றை சரியான அளவில் மட்டும் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக சில பழங்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், சர்க்கரை நோயாளர்களுக்கு சில பழங்கள் தவிர்க்க வேண்டிய ஒன்றாக இருக்கலாம், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் பொட்டாசியம் உள்ள பழங்களை தவிர்க்க வேண்டியிருக்கலாம், அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் தவிர்க்க கோரப்படலாம், இப்படி பல்வேறு நிபந்தனைகள் உள்ளன –  எனவே ஏதேனும் உடல் நல பிரச்சினை உள்ளவராக இருந்தால், நீங்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்து உங்கள் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது அவசியம்.

முடிவுரை

கோடைக்காலத்தின் பெறும் சவாலாக இருப்பது அதன் வெப்பமும், அந்த பருவகாலத்தில் பரவும் உடல்நல பாதிப்புக்களுமே ஆகும். எனவே அவற்றை சமாளிக்கவும், நமது உடலின் ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலை சீராக பராமரிக்கவும் உறுதுணையாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அப்படி உதவும் உணவுகளில் பழங்கள் மிக முக்கியமான இடத்தில் உள்ளன. நமது தேவைக்கேற்பவும், சீதோஷ சூழலுக்கு ஏற்பவும், நாம் வசிக்கும் பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய பழங்களை தேடிச்சென்று சாப்பிட வேண்டும். நம் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக பல்வேறு வகையான பழங்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களின் இயற்கையான உடல் ஆற்றலை வளர்க்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கோடையில் சாப்பிடக் கூடாத பழங்கள் என்ன?

சாப்பிடக் கூடாத பழங்கள் என்று எதுவும் இல்லை என்ற போதிலும், கோடை காலத்தில் உடல் சூட்டினை அதிகரிக்கும் பழங்களாக கருதப்படும் பேரிச்சை, அத்தி, பலா, அன்னாசி, போன்ற பழங்களை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. மேலும், ஒரு சிலருக்கு சில பழங்களினால் ஒவ்வாமை ஏற்படலாம், அல்லது சில பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும் மருத்துவர் பரிந்துரைத்திருக்கலாம் –  அவர்கள் அந்த பட்டியலை நினைவில் வைக்க வேண்டும்.

கோடையில் ஜூஸ் குடிப்பது நல்லது தானே?

செயற்கையான சுவை கூட்டிகள், பிரிசர்வேட்டிவ்கள், நிறங்கள் சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. சர்க்கரை சேர்க்கப்படாத தர்பூசணி, கிர்ணி, போன்ற பழச்சாறுகள் மற்றும் இளநீரை அருந்தலாம். சர்க்கரை சேர்க்கவேண்டிய தேவை இருந்தால், அதைத் தவிர்த்து இயற்கையாக இனிப்பாக இருக்கும் பழங்களை அப்படியே சாப்பிடுவது சிறந்தது.

பழங்கள் சாப்பிட எது சிறந்த நேரம் காலையில் எழுந்தவுடனா? அல்லது இரவு உறங்கும் முன்பா?

பொதுவாக சிட்ரஸ் பழங்களைத் தவிர இதர பழ வகைகளை காலை வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அப்போது தான் அதன் ஊட்டச்சத்துக்கள் நன்றாக நமக்கு கிடைக்கும். சிற்றுண்டிகளாக பழங்களை சாப்பிடலாம். ஆனால் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் செரிமான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு வேளையில், உறங்கும் முன்பு பழங்களை தவிர்ப்பது நல்லது.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top