பல வண்ண கேரட்கள் – ஒரு அறிமுகம்
கேரட் என்றால் அது ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருக்குமென நாம் நம்புகின்றோம். ஆனால் வானவில் போல பல்வேறு நிறங்களில் கேரட்டை பார்க்க நேர்ந்தால் அது நமக்கு வினோதமாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும்.
ஆரஞ்சு நிறத்தில் மட்டுமில்லாமல் கேரட் ஊதா, சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மனிதனின் உணவுத் தேவைக்காக வளர்க்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைத்து கேரட்களும் நல்ல அடர் ஊதா நிறத்தில் தான் இருந்தன; அதன் பின் டச்சு நாட்டை சேர்ந்த விவசாயிகள் இனிப்பான, குண்டான ஆரஞ்சு கேரட்டை உருவாக்கினர்.
தற்போது கேரட் ஊதா, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் கிடைக்கிறது.
பல்வேறு நிறங்களில் வரும் கேரட் எல்லாவற்றும் ஆரஞ்சு கேரட் போன்ற சுவையைக் கொண்டிருக்காது. மஞ்சள் கேரட்டிற்கு செலரி மற்றும் வோக்கோசு (பார்ஸ்லி) போன்ற மண்வாசனையுடன் கூடிய இனிப்பு சுவை இருக்கும். வெள்ளை கேரட் ஒரு மிதமான சுவையைக் கொண்டிருக்கும். ஊதா கேரட் குறைவான இனிப்பு அல்லது காரமான சுவையைக் கொண்டிருக்கும்.
கேரட் வெவ்வேறு நிறங்களில் இருக்க என்ன காரணம்?
ஒரு வகை வேர் காய்கறியான கேரட், பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கேரட் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, மெஜந்தா மற்றும் ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைப்பது சிலருக்குத் தெரியாமல் கூட இருக்கலாம்.
கேரட் பற்றிய மற்றொரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள் இதன் வேரை மட்டுமே அதாவது கேரட்டை மட்டுமே சாப்பிட எடுத்துக்கொண்டு, அதன் தண்டுகள் மற்றும் இலைகளை தூக்கிப்போட்டு விடுகிறார்கள். ஆனால் அவையும் சாப்பிட உகந்தவை என்பது தான் உண்மை.
ஒரு காலத்தில் கேரட் செடிகள் அவற்றின் வேர் பகுதியைக் காட்டிலும், அதன் விதைகள், மற்றும் இலைகளுக்காக அதிகம் பயிரிடப்பட்டன. சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து, மக்கள் அதன் வேரை உண்பதற்காக எடுத்துக்கொண்டு, இலைகளை வேண்டாமென அப்புறப்படுத்த தொடங்கினர்.
கேரட்டின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் காரணமாக அவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, பீட்டா கரோட்டின் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. ஊதா மற்றும் மஞ்சள் கேரட்டில் லூட்டியன் என்கிற கரோட்டினாய்ட்ஸ் (ஒரு வித நிறமி) அதிகளவில் உள்ளது.
கேரட்டின் நிறங்கள்
ஆரஞ்சு நிற கேரட்கள்
நமக்கு நன்கு பரிச்சயமான இந்த ஆரஞ்சு நிற கேரட்களில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது; மேலும், இதில் தான் உண்மையான கேரட் சுவையும் உள்ளது. லேசான நிற வேற்றுமையுடன் பல நிறங்களில் வரும் இந்த ஆரஞ்சு கேரட்கள் அளவிலும் சிறியது, பெரியது என சற்று மாறுபடலாம். ஒருவேளை நீங்கள் முதல் முறையாக கேரட்டை பயிர் செய்ய விரும்பினால், ஆரஞ்சு வகைகளைத் தேர்வுசெய்யவும்.
வெள்ளை நிற கேரட்கள்
வெள்ளை நிற கேரட்கள் ஆப்கான் மற்றும் ஈரானிய பகுதிகளிலிருந்து வந்தவையாகும். இவை மற்ற கேரட்களைப் போல அற்புதமான சுவையாகவோ அல்லது இனிப்பாகவோ இருக்காது. மேலும், இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகளவில் இருப்பதில்லை. திடமான இந்த வெள்ளை கேரட்களில், நமக்குத் தேவையான நார்ச்சத்து நிறைய உள்ளது. நமது உணவு பதார்த்தங்களுக்கு எந்தவித சுவையையும் சேர்க்காமல், கூடுதலாக ஒரு திடத்தன்மையை மட்டும் வழங்குவதற்கு வெள்ளை கேரட்டை சமையலில் பயன்படுத்தலாம்.
மஞ்சள் நிற கேரட்கள்
பிரகாசமான மஞ்சள் நிறத்தைக் கொண்ட இவ்வகை கேரட் கடிக்கும் போது நொறுக்கென்று சாறு நிறைந்ததாகவும், வாசமாகவும் இருக்கும். சமைக்காமல் சாப்பிட்டால் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும் மஞ்சள் நிற கேரட் – சமைத்த பின்பும் அவற்றின் நிறத்தை இழக்காமல் அப்படியே இருக்கும்.
இவற்றில் லூட்டியன் என்கிற பிக்மென்ட் நிறைய உள்ளது. ஸ்குவாஷ், கிவி, ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகள், திராட்சை மற்றும் பல்வேறு கோஸ் வகை (பிராசிகா) காய்கறிகளிலும் லூட்டியன் கிடைக்கிறது. இது வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு ஊட்டச்சத்தாகும்.
கொழுப்புடன் சேர்த்து உட்கொள்ளும் போது லூட்டியன் உடலால் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
சிவப்பு நிற கேரட்கள்
அதிகளவு லைக்கோபீன் என்கிற நிறமி உள்ளடங்கியுள்ள சிவப்பு நிற கேரட்டிற்கு, ஆரஞ்சு நிற கேரட்டைப் போன்ற சுவையே இருக்கும்; ஆனால் சிவப்பு நிற கேரட்களில் சற்று மண்வாசனையும், இனிப்பும் அதிகமாக இருக்கும். இவை பறித்து உடனே சாப்பிடவும், அல்லது சமைத்து சாப்பிடும் போதும் மிகவும் சுவையாக இருக்கும். கேரட்டில் உள்ள நன்மை தரும் கூறுகளை நமது உடல் உறிஞ்சுவதற்கு கொழுப்புகள் அவசியமாகிறது.
ஊதா நிற கேரட்கள்
ஊதா நிற கேரட்களின் சுவை வழக்கமான ஆரஞ்சு நிற கேரட்டிலிருந்து வித்தியாசமானது. சில நேரங்களில் மண் போன்ற வாசனையுடன், காரமான சுவையைக் கொண்டிருந்தாலும், இவை மிகவும் இனிப்பாகவும் இருக்கும். சமைக்கும்போது இவை அதன் நிறத்தை குறிப்பிடத்தக்க அளவில் இழக்கின்றன. இருப்பினும், ஒரு தனி சுவையுடன் இவை கேரட் ஜூஸ் செய்வதற்கு அற்புதமானவையாகும்.
கூடுதலாக, ஊதா கேரட்டில் நிறைய அந்தோசயினின்ஸ் (நிறமி) உள்ளன. ஊதா, நீலம் அல்லது கருப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்திலும் இந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. சிவப்பு, ஆரஞ்சு அல்லது வெள்ளை நிறங்களில் நடுப்பகுதியைக் கொண்ட ஊதா கேரட்களும் கிடைக்கின்றன. இது போன்ற கேரட்கள் அனைத்திலும் அதிக அளவு அந்தோசயினின்ஸுடன் லைக்கோபீன் மற்றும் ஆல்பா கரோட்டின் ஆகியவையும் சேர்ந்து கிடைகின்றன.
கருப்பு நிற கேரட்கள்
"கருப்பு" நிற கேரட் என்று அழைக்கப்படும் இவை மிகவும் அடர்த்தியான ஊதா நிற கேரட்களே ஆகும். அதிக அளவு அந்தோசயினின்ஸ் இருப்பதால், மற்ற லேசான நிறத்தினைக் கொண்ட கேரட்களைக் காட்டிலும் இவை அற்புதமானவையாகும். கேரட் வகைகளிலேயே மிகவும் காரமான இந்த கருப்பு நிற கேரட் - ஊதா நிற கேரட் போன்ற ஆரோக்கியப் பலன்களை வழங்குகின்றது.
வெவ்வேறு நிற கேரட்களின் சுவை மாறுபட்டு இருக்குமா?
ஆரஞ்சு, ஊதா, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் கேரட்களுக்கு இடையிலான சுவை வேறுபாடு கண்டுபிடிக்கும் அளவிற்குப் பெரிதாக இருக்காது. வெவ்வேறு வண்ண தக்காளியைப் போல கேரட்கள் சுவைக்க வித்தியாசமாக இருக்காது. கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது மட்டும் தான் பெரும்பாலும் அவற்றின் சுவை வேறுபாடு வெளிப்படும்; மற்றபடி சுவையில் வித்தியாசம் என்பது மிகவும் லேசான அளவில், கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
ஆரஞ்சு நிற கேரட்
17-ஆம் நூற்றாண்டில், ஹாலந்து நாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆரஞ்சு கேரட்கள், மற்ற கேரட்களை பின் தள்ளி, ‘பொதுவான கேரட்’ என்ற இடத்தைப் பிடித்தது. அதற்கு முன்பு, கேரட் பச்சை உட்பட பல்வேறு வண்ணங்களில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற வண்ண கேரட்களைப் போலவே, ஆரஞ்சு நிற கேரட்டிலும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது; மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் A இதில் உள்ளது. இவற்றிற்கு மண் மணமும், இனிப்பு சுவையும் உள்ளது. பச்சையாக சாப்பிட்டாலும் சரி, சமைத்து சாப்பிட்டாலும் சரி, இவை மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.
கேரட்டை ஏதேனும் ஒரு டிப் உடன் சிற்றுண்டியாக உண்ணலாம், சாலட்களில் சேர்க்கலாம், அல்லது காரமான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தும் சுவைக்கலாம்.
சிவப்பு நிற கேரட்
சுவை என்று வரும்போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு கேரட் ஒன்றுபோலவே இருக்கும். தக்காளியில் காணப்படும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டான லைக்கோபீன், அவற்றின் அதன் சிவப்பு நிறத்தை அளிக்கிறது. லைக்கோபீனின் சில நன்மைகளைக் குறிப்பிட வேண்டுமென்றால், அவை ஆரோக்கியத்திற்கு நல்லது, நரம்பு மண்டல வலியைக் குறைக்கிறது, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது, மற்றும் மூளைக்கு நன்மை பயக்குகிறது.
க்ரீமியான கேரட் சூப், அல்லது இஞ்சி சேர்க்கப்பட்ட கேரட் சூப் போன்ற உணவுகளில் வண்ணமயமான காய்கறிகளைச் சேர்க்கும் போது, சிவப்பு நிற கேரட்களையும் புதுமையாக சேர்க்கலாம்.
ஊதா நிற கேரட்
ஊதா நிற கேரட் வசீகரமாகவும், பளிச்சென்றும் இருக்கும்; இருப்பினும் இவை பார்ப்பதற்கு சாதாரண ஊதா நிறத்தில் தான் தெரியும். அதுவே வெளிப்புறத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால், அவை தனித்துவமான ஆரஞ்சு நிற மையப்பகுதியை கொண்டிருப்பதைக் காணலாம்.
ஊதா நிற கேரட் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டதாகும். மிக அரிதாகவே இவை லேசான காரத்துடன் இருக்கும். ஊதா நிற கேரட்கள் பெரும்பாலும் அவற்றின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் அதன் ஊதா நிறத்தை தக்கவைக்கின்றன. கண்டறிய முடியாத அளவிற்கு குறைவாக இருக்கும் இதன் காரமான சுவை, எப்போதும் அதில் இருப்பதில்லை. ஊதா நிற கேரட்டை சமைக்காமல் சாலட்களில் சேர்க்கும் போதும், புளிப்பான ஊறுகாய் செய்யும் போதும் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
வெள்ளை அல்லது தங்க நிற கேரட்
வெள்ளை அல்லது தங்க நிற கேரட் பொதுவாக மஞ்சள் அல்லது கிரீம் நிறத்தில் தான் இருக்கும். மற்ற நிற கேரட்களில் காணப்படும் வழக்கமான மண்வாசனை இதற்குக் கிடையாது; மேலும், இதன் சுவை மிதமான ஒன்றாக இருக்கும்.
இந்த வகை கேரட் ஆரஞ்சு, சிவப்பு அல்லது ஊதா வகைகளை விட இனிப்பான சுவையைக் கொண்டதாகும் குறிப்பாக, வறுத்து சாப்பிட்டால் இவை நல்ல சுவையாக இருக்கும்; வெண்ணெய் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து ஒரு பேனில் வறுப்பது மேலும் சிறப்பாக இருக்கும். சிறந்த வெளிர் நிறத்தை வழங்கும் இந்த கேரட்டினை ஏதேனும் கஞ்சி அல்லது சூப்பில் சேர்க்கும் போது எதிர்பாராத ஒரு இனிப்பு சுவையை வழங்கி சாப்பிடுபவரை ஆச்சரியப்படுத்தும்.
வெள்ளை அல்லது தங்க கேரட்டை நாணயங்கள் போல வட்டமாக வெட்டி - வெண்ணெய், சிக்கன் துண்டுகள், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளுடன் சேர்த்து பல எளிதான சைட்-டிஷ் உணவுகளைத் தயாரிக்க பயன்படுத்தலாம். இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு பதார்த்தங்களில் சில ஆரோக்கியமான காய்கறிகளைச் சேர்க்க விரும்புவோர், இந்தவகை கேரட்டைப் பயன்படுத்தலாம்.
கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வேர் காய்கறியான கேரட்டில் மனிதர்களுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்தினை உணவின் மூலம் மட்டுமே நம்மால் பெற முடியும்; ஏனெனில், நமது உடலால் இதனை உற்பத்தி செய்ய முடியாது.
வெள்ளை மற்றும் மஞ்சள் கேரட்டில் பீட்டா கரோட்டின் குறைவாக உள்ளது. மஞ்சள் மற்றும் ஊதா கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட அளவில் லூட்டியன் என்ற நிறமி உள்ளது. கேரட்டிற்கு அவற்றின் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தை வழங்கும் பீட்டா கரோட்டின் ஒரு ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படும். இது, உடலால் வைட்டமின் A-வாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
வைட்டமின் K, வைட்டமின் B6, மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை கேரட்டில் கணிசமான அளவில் உள்ளன. சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவை கேரட்டில் உள்ள ஃப்ரீ சர்க்கரை வகைகளாகும்.
பல வகையான நீல பெர்ரி, ஊதா பெர்ரி மற்றும் பிளாக்பெர்ரிகளுக்கு அவற்றின் பிரகாசமான நிறத்தையும், ஆரோக்கியப் பலன்களையும் வழங்கும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகளான ‘அந்தோசயினின்ஸ்’ ஊதா நிற கேரட்டில் அதிகளவில் நிறைந்துள்ளன. மேலும் இவை, ஆரஞ்சு நிற கேரட்டைப் போன்று பல உடல்நலப் பலன்களை வழங்குகின்றன. அந்தோசயினின்ஸ் எனப்படும் இந்த நீல நிறமிகள் நமது நினைவாற்றல் மற்றும் பார்வைத்திறனை அதிகரிப்பது, மாரடைப்பினைத் தடுப்பது, இன்ஃப்ளமேஷனைக் குறைப்பது, மற்றும் உடல் எடை மேலாண்மைக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கேரட்டை சேமித்து வைக்கும் முறை
குளிர்சாதன பெட்டியில் பிளாஸ்டிக் பைகளில் பத்திரப்படுத்திய பிறகு, கேரட்டை மூன்று வாரங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். கேரட்டை குளிர்ந்த சூழலில் வைத்தால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். கொத்தாக இருக்கும் கேரட்டை ஸ்டோர் செய்வதற்கு முன்பு, அவற்றின் பச்சையான இலை நுனிகளை வெட்டிவிடவும், ஏனெனில் அவை கேரட்டின் ஈரப்பதம் மற்றும் வைட்டமின்களை இழக்கச்செய்து, அவற்றை வாட்டமாகவும், காய்ந்து போகவும் செய்யும்.
ஆப்பிள், பேரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றிலிருந்து கேரட்டை தனியாக வைக்கவும். ஏனெனில், அவற்றிற்கு எத்திலீன் வாயுவை உருவாக்கும் தன்மையுள்ளது. இந்த வாயு கேரட்டை கசப்பாக மாற்றிவிடும்.
முடிவுரை
கேரட் பல்வேறு தரத்தில் கிடைக்கும். ஒவ்வொரு கேரட்டின் வெளிப்புற வண்ணமும், அதற்குரிய குணநலன்களைக் கொண்டுள்ளது. உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வண்ணங்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கேரட் அவற்றின் நிறமிகள் காரணமாக பல்வேறு வண்ணங்களில் வருகிறது.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற கேரட்களின் நிறமிகள் முறையே அந்தோசயினின்ஸ் மற்றும் கரோட்டின்ஸ் ஏற்படுகின்றன. கேரட்டை வளர்க்கப் பயன்படுத்தப்படும் விவசாய முறையும் அதன் நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வருடத்தின் எந்த காலகட்டத்தில் கேரட்டின் விதை விதைக்கப்படுகிறது, வானிலை, மண்ணின் தரம், மற்றும் விதைக்கு எவ்வளவு சூரிய ஒளி மற்றும் தண்ணீர் கிடைக்கிறது ஆகிய காரணிகளைப் பொறுத்து கேரட்டின் நிறம் மாறுபடும்.